தமிழக அரசின் இலவச விளையாட்டு விடுதியில் பள்ளி மாணவர்கள் சேர்க்கை

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்


தமிழக அரசின் இலவச விளையாட்டு விடுதியில்
பள்ளி மாணவர்கள் சேர்க்கை!

எப்போ பாரு விளையாடிகிட்டே இருக்காங்க. பள்ளிப் பாடங்களை படிக்கவே மாட்டேங்கறாங்க. இதெல்லாம் எப்பத்தான் உருப்படப்போகுதோ? என்று இனி புலம்பாதீர்கள். பத்தாம் வகுப்பைக் கூட தாண்டதவர் சச்சின் தெண்டுல்கர். ஆனால் அவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் அளவிற்கு வளர்ந்தார் எனில் அதற்கு காரணம் விளையாட்டுதான். விஸ்வநாதன் ஆனந்த், பிவி சிந்து போன்றவர்கள் எல்லாம் தங்களின் விளையாட்டுத் திறமையால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்கள்.

உங்கள் பிள்ளைக்கு விளையாட்டு துறையில் ஆர்வமா? அவர்களுக்கு பிடித்த விளையாட்டில் முறையாக பயிற்சி கொடுத்தால், அவர்களும் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள். அட போங்க சார்..? படிக்க வைக்கவே முழி பிதுங்குது? இதுல பயிற்சிக்கு நாங்க எங்க போறது? என்று நீங்கள் கேட்பது எங்கள் காதுகளில் விழுகிறது.

உங்கள் குழந்தைகளுக்கு விளையாடத் தெரிந்தால் போதும். தமிழ்நாடு அரசே அவர்களுக்கு வேண்டிய பயிற்சியையும் கொடுத்தும், படிக்கவும் வைத்து, இலவச உணவு, விடுதி வசதிகளைத் தருவதோடு மட்டுமின்றி, மாநில, தேசிய, உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க அவர்கள் செலவிலேயே அழைத்துச் செல்வார்கள்.

தலைசிறந்த பயிற்சியாளர்களிடம் நேரடி பயிற்சி எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் சத்தான உணவு, முறையான பயிற்சி, உள்ளூர், வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளுக்கு இலவசமாக அழைத்துச் செல்வது என, முழுமையான விளையாட்டு வீரராக உங்கள் பிள்ளையை மாற்றிவிடுவார்கள். இந்த விடுதிகளில் திறமையை வளர்த்துக் கொண்டு இந்திய அணி சார்பில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, விளையாட்டுத்துறையில் பிரகாசிக்கலாம்.

சிவாஜி பட பாணியில் சொல்வதென்றால்… உங்கள் குழந்தை நன்றாக விளையாடினா மட்டும் போதும். மற்ற எல்லாத்தையும் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பார்த்துக்கொள்ளும். தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களிலும் இந்த ஆணையம் இலவச விளையாட்டு விடுதிகளை நடத்திவருகிறது. இந்த விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பபட்டுள்ளது.

யார் இதில் சேரலாம்?

வரும் கல்வி ஆண்டில் ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு படிக்க இருக்கும், விளையாட்டில் ஆர்வமுடைய இரு பால் மாணவர்களும் சேரலாம்.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள்

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல்

மாணவியருக்கான விளையாட்டு விடுதிகள்

ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும்  சென்னை.

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 08.05.2019 முதல் 10.05.2019 வரை நடைபெற உள்ளது. 

மாணவர்களுக்கான விளையாட்டுகள்

1. தடகளம், 2. இறகுப்பந்து, 3. கூடைப்பந்து, 4. குத்துச்சண்டை, 5. கிரிக்கெட், 6. கால்பந்து, 7. வாள்சண்டை,   8. ஜிம்னாஸ்டிக்ஸ், 9. கைப்பந்து, 10. வளைகோல்பந்து, 11. நீச்சல், 12. டேக்வோண்டோ, 13. கையுந்துப்பந்து, 14. பளுதூக்குதல், 15.கபடி, 16. மேசைப்பந்து, 17. டென்னிஸ், 18. ஜூடோ, 19. ஸ்குவாஷ், 20. .வில்வித்தை

மாணவிகளுக்கான விளையாட்டுகள்

1. தடகளம், 2. இறகுப்பந்து, 3. கூடைப்பந்து, 4. குத்துச்சண்டை, 5. கால்பந்து, 6. வாள்சண்டை, 7. கைப்பந்து, 8. வளைகோல்பந்து, 9. நீச்சல், 10. டேக்வோண்டோ, 11. கையுந்துப்பந்து, 12. பளுதூக்குதல், 13.கபடி, 14. டென்னிஸ், 15. ஜூடோ, 16. ஸ்குவாஷ்

மேற்குறிப்பிட்ட விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்விளையாட்டுகளில் ஆர்வமுள்ள மாணவர்களும் சேரலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கில், மாணவர்களின் உடற்திறன், விளையாட்டுத்திறன் சோதிக்கப்படும். இதன் அடிப்படையில் மாணவர்கள் இந்த விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
பயிற்சி இலவசம். உணவு இலவசம். தங்குமிடம் இலவசம். இந்த விடுதிகளுக்கு அருகில் இருக்கும் சிறந்த பள்ளியில் மாணவர்கள் படிக்க வைக்கப்படுவர். அப்பள்ளியின் படிப்பக் கட்டணத்தை மட்டும் பெற்றோர்கள் செலுத்த வேண்டி இருக்கும்.

விளையாடுகின்ற குழந்தைகளை இப்படி முறைப்படி விளையாட விடுங்க. உங்க வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் சேர்த்து விருதுகளை அள்ளிக்கொண்டு வருவார்கள்!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.05.2019

மாவட்ட அளவில் தேர்வு நடைபெறும் தேதிகள்: 08.05.2019 முதல் 10.05.2019 வரை.

விவரங்களுக்கு: www.sdat.tn.gov.in

Comments

Popular posts from this blog

TAMILNADU SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT ENTRY FORMS 2025

உடற்கல்வி பாட புத்தகம் 6முதல் 10 வரை